பராசக்தி

parasakthi
நடிப்பு
சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி, கண்ணாம்பா, வி.கே.ராமசாமி, குமாரி கமலா

ஒளிப்பதிவு
எஸ்.மாருதி ராவ்

இசை
எஸ்.சுதர்சனம்

பாடல்கள்
சுப்ரமணிய பாரதி, பாரதிதாசன், மு.கருணாநிதி, உடுமலை நாராயண கவி,

கதை
எம்.எஸ்.பாலசுந்தரம்

திரைக்கதை, வசனம்
கலைஞர் மு.கருணாநிதி

இயக்கம்
ஆர்.கிருஷ்ணன், எஸ். பஞ்சு

தயாரிப்பு
ஏ.வி.மெய்யப்பன், பி.ஏ. பெருமாள் முதலியார்

     1952 ஆம் ஆண்டு தீபாவளி அன்று (17 அக்டோபர் 1952) வெளியானது பராசக்தி படம். சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., பண்டரிபாய் ஆகியோருக்கு முதல் படம்.

     இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த 1942 ஆண்டு சமயம். ஞானசேகரன், சந்திரசேகரன், குணசேகரன் மூவரும் சகோதரர்கள். பிழைப்புக்காக ரங்கூன் (பர்மா) சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஒரே தங்கை கல்யாணியின் திருமணத்திற்காக மூவரும் மதுரை வர தயாராகிறார்கள். போர் நடப்பதால் கப்பலில் பயணம் செய்ய ஒருவருக்கு மட்டும் இடம் கிடைக்க குணசேகரன் மட்டும் பயணமாகிறார். போர் காரணமாக பல மாதங்கள் தாமதமாகி சென்னை வந்தடைகிறது கப்பல். மதுரை ரயிலுக்கு டிக்கட் கிடைக்காததால் ஹோட்டலில் ஒரு நாள் தங்குகிறார் குணசேகரன். அங்கு ஒரு வஞ்சியால் வங்கிக்கப்பட்டு தன் பணம் அனைத்தையும் இழக்கிறார். பணம் இல்லாமல், பட்டினியால் வாடி, பிச்சை எடுத்து, பைத்தியமாக நடித்து தன் பசியைப் போக்கிக் கொள்கிறார் குணசேகரன். கடைசியில் ஒரு வழியாக தன் சொந்த ஊருக்குச் செல்கிறார். அங்கே கணவனை இழந்து, தந்தையையும் இழந்து கைக்குழந்தையுடன் குடிசை வீட்டில் தங்கி இட்லி வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறாள் தங்கை கல்யாணி. மாமன் வருவான் நிலைமை மாறும் என்று குழந்தைக்கு ஆறுதல் சொல்லும் கல்யாணியின் நம்பிக்கையில் மண் அள்ளி போட விரும்பாமல் அவளிடமும் பைத்தியமாக நடித்து, அவளுக்கு காவலாக இருக்கிறான் குணசேகரன்.

     வறுமையைப் பயன்படுத்தி கல்யாணியை நாசமாக்க துடிக்கிறான் அந்த ஊர் மைனர். குணசேகரன் அவனை உதைக்கிறான். அவளை வேலைக்கு அமர்த்தி படுக்கைக்கு அழைக்கிறான் நாட்டாமை. அவனிடமிருந்து தப்பித்து தன் அண்ணன் சந்திரசேகரன் வீட்டு விருந்துக்குச் சென்று தன் பிள்ளை ஆறு நாள் பட்டினி கிடப்பதாகச் சொல்லி உண்வு கேட்கிறாள் கல்யாணி. காலைப் பிடிக்கும் அவளை தங்கையென்று தெரியாமல் எட்டி உதைக்கிறான் அண்ணன். மனம் நொந்து பராசகதி கோவிலுக்கு போகிறாள் கல்யாணி. அவளை மானபங்க படுத்த முயல்கிறான் கோவில் பூசாரி. அவனிடமிருந்து தப்பித்து செல்லும் கல்யாணி இந்த உலகில் வாழ விருப்பமில்லாமல், தன் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள். ஆனால் காவலரால் காப்பாற்றப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறாள். அங்கு அவளை இன்னாரென்று அறிகிறான் நீதிபதியான அண்ணன் சந்திரசேகரன். அதே நேரத்தில் தங்கைக்காக கோவில் பூசாரியை தாக்கிவிட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்கிறான் குணசேகரன். குணசேகரனின் உணர்ச்சி மிக்க நீதிமன்ற வசனத்தின் முடிவில், கல்யாணியின் குழந்தை குணசேகரனின் காதலியால் காப்பாற்றப்பட்டது தெரிய வருகிறது. வழக்கு முடிவுக்கு வர கல்யாணியும், குணசேகரனும் சந்திரசேகரனிடம் சேர்கிறார்கள். பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்கு பொருளுதவி கேட்டு வரும் ஞானசேகரனும் அவர்களுடன் வந்து சேர்ந்து விடுகிறார். பிரிந்தவர்கள் ஒன்று சேர முடிவில் சுபம்.

parasakthi2
     "சக்சஸ், இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்" என்ற வசனத்தின் மூலம் சிவாஜி கணேசனின் நடிப்பு சகாப்தம் ஆரம்பமானது. இந்த படம் இவருக்கு முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மட்டார்கள். முதல் படத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செஞ்சுரி அடித்திருந்தார். இந்த படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமியைத் தான் போட வேண்டும் ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் விரும்பினாராம். ஆனால் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் தான் பிடிவாதமாக சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாராம். பெருமாள் முதலியார் தீவிர அண்ணா விசுவாசி. சிவாஜி அண்ணாதுரையின் சிபாரிசு. கடைசியில் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டாராம் ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார். அதே போல் சிவாஜிக்கு தாய் போல் இருந்து பலவகையிலும் உதவி செய்தவர் பெருமாள் முதலியார் மனைவி சாந்தாம்மாள். அதனால் தான் சிவாஜி தன் மூத்த பெண்ணிற்கு சாந்தி என்று பெயர் வைத்தாராம், நன்றி மறவாமல். அதோடு ஒவ்வொரு பொங்கலுக்கும் புத்தாடைகளுடன் தவறாமல் பெருமாள் முதலியாரைச் சென்று சந்தித்து ஆசி பெற்று வருவாராம் நடிகர் திலகம்.

     சுதர்சனம் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. 'போறவரே' பாடலில் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரல் பண்டரிபாய்க்கு நன்றாக பொருந்தியிருக்கும். உடுமலை நாராயண கவி எழுதிய 'தேசம் ஞானம் கல்வி' பாடல், 'கா கா கா' பாடல் மற்றும் பாரதியாரின் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' பாடலைப் பாடியுள்ளவர் சி.எஸ்.ஜெயராமன். இதை தவிர 'என் வாழ்விலே ஒளி ஏற்றும்', 'பூ மாலையை புழுதியிலே', 'பொருளே இல்லார்க்கு', 'திராவிட நாடு வாழ்கவே', 'கொஞ்சும் மொழி சொல்லும்', 'பேசியது நானில்லை' என்ற பாட்டுகளும் உள்ளன.

     தமிழின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்றாக பராசக்தி என்றும் நிலைத்து நிற்கும்.

வீடியோ


*****
பாடல்கள்
1. ஓ... ரசிக்கும் சீமானே வா
படம் : பராசக்தி (1952)
பாடியவர் : எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை : எஸ்.சுதர்சனம்
இயற்றியவர் : கலைஞர் மு. கருணாநிதி

வீடியோ


ஓ...
ரசிக்கும் சீமானே வா

ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்

அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

கற்சிலையின் சித்திரமும் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு

வீண் கற்பனையெல்லாம்
மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே
மதியே

தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ...
ரசிக்கும் சீமானே வா

வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி

வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம்!

தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ...
ரசிக்கும் சீமானே வா