டிராகன்

Dragon
நடிப்பு
பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், ஜார்ஜ் மரியன், வி.ஜே. சித்து, ஹர்ஷத் கான், சினேகா, பி.எல். தேனப்பன்

ஒளிப்பதிவு
நிகேத் பொம்மிரெட்டி

படத்தொகுப்பு
பிரதீப் இ. ராகவ்

இசை
லியோன் ஜேம்ஸ்

கதை
அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன்

திரைக்கதை, இயக்கம்
அஸ்வத் மாரிமுத்து

தயாரிப்பாளர்கள்
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ்

தயாரிப்பு நிறுவனம்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்

வெளீயீடு:
21 பிப்ரவரி 2025

*****

பொறியியல் கல்லூரியில் டான் ஆக வலம் வரும் பிரதீப் ரங்கநாதனை, அனைவரும் டிராகன் என அழைக்கிறார்கள். படிப்பின் கவனம் இல்லாமல் இருக்கும் அவருக்கு 48 அரியர் விழுகிறது. கல்லூரி முடிந்த பிறகும், பொறுப்பில்லாமல் இருப்பதால் காதலும் தோல்வியடைகிறது. இதையடுத்து வாழ்க்கையில் வேகமாக முன்னேற, குறுக்கு வழியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் பிரதீப். இதையடுத்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறிய அவர், பெரிய குடும்பத்திற்கு மாப்பிள்ளை ஆகிறார். ஒரு கட்டத்தில் பிரதீப் ரங்கநாதனை மீண்டும் சந்திக்கும் கல்லூரி முதல்வர் மிஷ்கின், உண்மை வெளியே தெரியாமல் இருக்க மீண்டும் படித்து அந்த அரியர் பேப்பர்களை பாஸ் செய்யச் சொல்கிறார். இதையடுத்து 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கல்லூரிக்கு செல்லும் பிரதீப் அரியர் பேப்பர்களை எழுதி பாஸ் செய்தாரா? தனது வேலையை காப்பாற்றிக் கொண்டாரா? விரும்பிய பெண்ணை மணந்தாரா? என்பதே படத்தின் கதை.

ஹீரோவாக பிரதீப்புக்கு இது இரண்டாவது படம். இப்படத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.

ஏற்கெனவே பல படங்களில் நடித்திருந்தாலும் மிஷ்கினுக்கு இது பேர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அனுபமா பரமேஸ்வரன் முதல் பாதியில் சிறிது நேரமே வந்தாலும், இரண்டாம் பாதியில் அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமான பாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார்.

மற்றொரு நாயகி கயாடு லோஹருக்கு முக்கியத்துவம் குறைந்த கேரக்டர்தான் என்றாலும் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளார்.

விஜே சித்து, ஹர்ஷத் கான் இருவருக்குமே நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் இரண்டாம் பாதியில் ஹர்ஷத் கான் செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. ஜார்ஜ் மரியான், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் தமது கச்சிதமான நடிப்பை தந்து ரசிக்க வைக்கிறார்கள்.

சினேகா, இவானா ஆகியோர் ஓரிரு காட்சிகளை வந்தாலும் கவனிக்க வைக்கிறார்கள்.

இரைச்சலை வாரி இறைக்காமல் காதுக்கு ரம்மியமான பின்னணி இசையையும், பாடல்களையும் கொடுத்திருக்கிறார் லியோன் ஜேம்ஸ். நிகேத் பொம்மியின் கேமரா காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

கதாபாத்திர வடிவமைப்பு தான் படத்தின் பலமே. எந்த ஒரு பாத்திரமும் தேவையின்றி திணிக்கப்படாமல், பார்வையாளர்களின் மனதில் ஆழமாக பதியும்படி எழுதியுள்ளார் இயக்குநர் அஸ்வத்.

சில காட்சிகள் யூகிக்க முடிந்தாலும், கடைசி வரை பரபரப்பாக செல்லும் திரைக்கதை அதை மறக்கடிக்க செய்கிறது.

கல்லூரியின் ரவுடித்தனம் செய்வது, அரியர் வைப்பது ஆகியவற்றை நியாயப்படுத்தாமல் கல்விதான் நம்மை எப்போதும் உயர்த்தும் என்பதையும், நாம் செய்யும் ஒரு சிறு சிறு விஷயங்கள், நல்லதோ கெட்டதோ, பிறரது வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அழுத்தமாகவும், அதே நேரம் பொழுது போக்கு அம்சங்களுடன் சொன்ன வகையில் இப்படம் வெற்றி பெற்றுள்ளது.

சொல்லப்படும் நீதி பார்ப்பவர்களை நிச்சயம் கண்கலங்க வைத்துவிடும்.

பாடல்கள்
1. வழித்துணையே
படம் : டிராகன் (2025)
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சஞ்சனா கலாமஞ்சே
இசை : லியோன் ஜேம்ஸ்
பாடலாசிரியர்கள் : விக்னேஷ்சிவன் மற்றும் கோ சேஷா

வீடியோ


ஆண்: வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழித்துணையே
வழித்துணையே நீயே

ஆண்: கண்டேன் கண்டேன் என்னுடையவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

பெண்: கண்டேன் கண்டேன் என்னுடையவனை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

ஆண்: உற்று உன்னைப் பார்கையிலே
தொற்று கிடைத்த தனிமையினை
கற்று தந்த காதல் வலி
விட்டு போனதே

ஆண்: ஊர்கூடும் நல்ல நல்ல தடங்கல்லெல்லாம்
உன்னை கூட்டிக்கொண்டு கைக் கோர்த்து கொண்டு
இதழ் சேர்த்து வைக்க நல்ல இடங்கள் எல்லாம்
வா தேடித் தேடி போவோம்

பெண்: இதழ் சேர்ந்திருக்கும் அந்த நேரத்திலே
விழி மூடி நீ இருக்கும் வேலையிலே
என்னென்ன வரம் வேண்டும் என்பதையே
நான் வேண்டி வேண்டி கேட்பேன்

ஆண்: வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழித்துணையே
வழித்துணையே

ஆண்: வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திரிவோம் வா
என் துணையே
வழித்துணையே நீயே

ஆண்: கண்டேன் கண்டேன் என்னுடையவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

பெண்: இந்த நேரம் இனிப்பது போல
எப்போதும் இருப்பாயா
உச்சபச்ச ஆசை கொண்டேனே
உன்னிடத்தினிலே

ஆண்: வெட்பம் குளிர் எது வந்தாலும்
இதமாக இணைப்பாயா
திக்கு முக்கு ஆடிப் போகின்றேன்

பெண்: நீர்வீழ்ச்சி நெற்றியின் மீது
நிற்காமல் பொழிவது போல
உன் முத்தம் கொட்டிட வேண்டும்
புருவம் தொடங்கி நுனி பாதம் வரை

ஆண் மற்றும் பெண்: எங்கேயோ பிறந்த என் அன்பே
எனைத் தேடி வந்ததே போதும்
இனி வாழும் அத்தனை நாளும்
மினுக்கும் மினு மினுக்குமே

ஆண்: வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே
வழி துணையே

ஆண்: வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்

வா வா ஓடி திரிவோம் வா
என் துணையே
வழி துணையே நீயே

*****

2. ஏன்டி விட்டுப் போன
படம் : டிராகன் (2025)
பாடியவர் : சிலம்பரசன்
இசை : லியோன் ஜேம்ஸ்
பாடலாசிரியர் : கோ சேஷா

வீடியோ


ஒரு நொடியில் காதல் நெஞ்சை உடைத்தாயடி
அழகான ஓவியத்தை கிழித்தாயடி
சிரிப்புக்குள் காயம் வைத்து சிதைத்தாயடி
விதை போட்ட கையில் வேரை சாய்த்தாயடி

சேர்ந்து கண்ட கனவுகள் பிழையா
சொன்ன வார்த்தை மொத்தமும் பொய்யா
கண்ணீர் இங்கு சிந்தி கொண்டு
கேள்வி கேட்க்கிறேன்

சாகும் வரையில் கூடவே இருப்பேன்
என்று செய்த சத்தியமெல்லாம்
வெறும் வார்த்தையா
நீ போட்டது பகல் வேஷமா

ஏன்டி விட்டுப் போன
உன் இதயம் கல்லா என்ன
ஏன்டி விட்டுப் போன
நிஜமா புரியலடி

ஏன்டி விட்டுப் போன
நான் தனியா இங்க சாக
ஏன்டி விட்டுப் போன
ஐயோ வலிக்குதடி

உன்னை ரசிச்ச எனக்கு இது வேணும்
உன்னை நேசிச்ச எனக்கு இது வேணும்
உன்னை நம்பி நான் கிடந்தேனே
எனக்கு இன்னும் வேணும்டி

தீயில் விழும் ஈசலை போல
உன் விழியில் விழுந்தவன் நானோ
உயிர் மொத்தமும் வெந்து தணிந்து
காந்தலாச்சுடி

உன்னைப் பிரிந்தால் அந்த உலகம்
சுழலாதடி
தன்னந்தனியாய் இனிமேல் நானும்
உலகினில் வாழ்ந்து என்னடி

எந்தன் ஆகாயத்தின்
நிலவே நீதானடி
உன்னை நான் தேடி நான் தேடி
என் ஆயுள் தீரட்டும்டி

ஏன்டி விட்டுப் போன
உன் இதயம் கல்லா என்ன
ஏன்டி விட்டுப் போன
நிஜமா புரியலடி

ஏன்டி விட்டுப் போன
நான் தனியா இங்க சாக
ஏன்டி விட்டுப் போன
அய்யோ வலிக்குதடி
ஏன்டி ஏன்டி ஏன்டி
விட்டுப் போன நீ
என் நெஞ்ச மண்ணுல நீயும்
குழி தோண்டி பொதச்சுட்டடி

ஏன்டி ஏன்டி ஏன்டி
விட்டுப் போன நீ
உயிர் இருந்தும் பிணத்தப் போல
உன்னால மாறிட்டேன்டி

*****